IFJ-UTU 2023 நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதிச் செயற்பாடு கடந்த நவம்பர் 23 ஆம் திகதி மு.ப. 10.00 மணி முதல் இடம்பெற்றது. “இலங்கை ஊடகங்கள் – உரிமைகளுக்காக பொறுப்புடன் முன்னோக்கிய நடையில்” எனும் தொனிப்பொருளின் கீழ், ஒன்லைன் மூலம் இடம்பெற்ற இந்நிகழ்வுடன் இணைந்தவாறு FMETU இனது 9ஆவது தேசிய பிரதிநிதிகள் மாநாடும் (2023.11.23) நடைபெற்றது.

இதற்காக உறுப்பினர்களுக்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கூகிள் படிவம் வழங்கி பதிவு செய்யப்பட்டதோடு, அதற்காக அழைக்கப்பட்ட 125 பேரில் சுமார் 105 பேர் பதிவு செய்திருந்தனர். ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் இந்த மாநாட்டில், இலங்கையில் இன்று ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து ஊடகவியலாளர்களுக்குக் தெளிவூட்டல் மற்றும் ஒரு முன்னணி ஊடக அமைப்பாக FMETU ஐ வலுப்படுத்துதல் ஆகியவற்றில் இவ்வருட நிகழ்ச்சித்திட்டம் கவனம் செலுத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள FMETU உறுப்பினர்களின் கூட்டுப் பங்கேற்புடன், 2024/2025 இற்கான ஏற்கனவே திட்டமிடப்பட்ட மூலோபாயத் திட்டம் மற்றும் எதிர்காலச் செயற்பாட்டின் திட்டமிடல் ஆகியன, உறுப்பினர்களிடையே மிக முக்கிய மையப் பொருளாக அமைந்திருந்தது.

“2024-2025 இற்கான சம்மேளனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் மற்றும் IFJ-UTU-2023” என்ற தலைப்பில், இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் தரிந்து உடுவரகெதரவினால் ஆரம்ப விரிவுரை முன்னெடுக்கப்பட்டது. IFJ-UTU-2023 திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட “மூலோபாய தலையீட்டுத் திட்டம் 2024-2025” பற்றி அவர் விரிவாக விளக்கியதோடு, இதில் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளையும் விளக்கினார். குறித்த விளக்கத்திற்குப் பின்னர் அது பற்றிய நேரடி விவாதத்தில் உறுப்பினர்கள் மிகவும் ஆவலுடன் பங்குபற்றியிருந்தனர். மூலோபாயத் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் உறுப்பினர்கள் பங்களித்தனர். இதற்காக உருவாக்கப்பட்ட கூகிள் படிவம் மூலம் 100 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் முன்வைத்த கருத்துகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

குறித்த கலந்துரையாடலின் பின்னர், 2024ஆம் ஆண்டின் பிரதிநிதிகள் மாநாட்டின் செயற்பாடுகள் முன்னைய தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட இந்திரா நவகமுவவின் தலைமையில் ஆரம்பமானது. கடந்த பிரதிநிதிகள் மாநாட்டின் அறிக்கை தர்மசிறி லங்காபேலியினால் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் மீதான விவாதத்திற்குப் பின்னர், 2024-2025 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான புதிய அதிகாரிகள் குழுவினர் நியமிக்கப்பட்டனர். இங்கு தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகள் குழு 09 உறுப்பினர்களைக் கொண்டதுடன், நிறைவேற்று உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 ஆகும். முழு நிர்வாகக் குழுவும் 25 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

பொருளாளர் றிஸ்வான் சேகு மொஹிதீன் 2021-2022 கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பித்தார், இது சபையால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.