– இலங்கையில் உலக ஒற்றுமை தினம் அனுஷ்டிப்பு

காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகளால் பலஸ்தீன ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்படுகின்றமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பும் (IFJ) மற்றும் அதனுடன் இணைந்த ஊடக அமைப்புகளும் பெப்ரவரி 26ஆம் திகதியை உலக ஒற்றுமை தினமாக அறிவித்துள்ளன.”ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்துங்கள்!” எனும்  கோஷத்துடன் இந்த பலஸ்தீன ஒற்றுமை தினம் அறிவிக்கப்பட்டது.இஸ்ரேல் படையினரால் காசாவில் பலஸ்தீன ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்படுகின்றமைக்கு கண்டனம் தெரிவித்து, ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (FMETU) நேற்றைய தினம் (26) ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்திருந்தது.

பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு, ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (FMETU) கொழும்பு 05, ரெயின்போ இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டுடன் இணைந்தவாறு ஒத்துழைப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

     

சம்மேளனத்தின் செயலாளர் தர்மசிறி லங்காபேலி, தலைவர் கிருஷ்ணீ இபாம், தேசிய அமைப்பாளர் தரிந்து உடுவரகெதர, யாழ்.ஊடக கழகத்தின் வி. செல்வகுமார், சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர் ஷெரிபா தாஹிர் ஆகியோர் கலந்து கொண்டு பலஸ்தீன பத்திரிகையாளர் சங்கத்திற்கும் பலஸ்தீனத்திற்கும் தமது ஆதரவை தெரிவித்தனர்.

 

இந்த இனப்படுகொலைப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவும், பலஸ்தீன மக்கள் தங்களுக்கு சொந்தமான சுதந்திர நாட்டில் வாழும் வாய்ப்பை வழங்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளிட்ட உலக வல்லரசுகளிடம் வலுவான கோரிக்கையொன்று இங்கு முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக, 102 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்களையும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைகளையும் கொன்று குவித்து இஸ்ரேல் நடத்திவரும் கொடூர இனப்படுகொலைப் போரை உடனடியாக நிறுத்துமாறு ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் வலியுறுத்தினர்.