ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தர்மசிறி லங்காபேலி மற்றும் பிரதிப் பொதுச் செயலாளர் திருமதி இந்திரா நவகமுவ ஆகியோர் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுடன் கடந்த 2022 நவம்பர் 22 ஆம் திகதி மேற்படி அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
இங்கு இலங்கையில் தொழில்துறை ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளம் பிரச்சினைகள் தொடர்பிலான நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

இலங்கையிலுள்ள பெரும்பாலான தொழில்சார் ஊடகவியலாளர்களுக்கு அவர்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தொழில் உரிமைகள் எதுவும் இல்லை எனவும், இலங்கையில் அடிப்படை உரிமை கூட இல்லாத ஒரேயொரு தொழில், ஊடகவியல் தொழில் எனவும், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் அமைச்சருக்கு இதன்போது விளக்கமளித்தது.

 

ஊடகவியலாளர்களின் தொழில் நிலை மற்றும் ஊடகத்துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஊடகத்துறை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் நடத்திய தனித்துவமான ஆய்வின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக அமைச்சருக்கு இவ்விடயங்கள் விளக்கமளிக்கப்பட்டன.

சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் (IFJ) வழிகாட்டல் மற்றும் உதவியுடன் IFJ-Union to Union (UTU) Global Union 2022 ஊடக தொழிற்சங்க சங்கங்களின் அனுசரணையுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் ஊடகத்துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தான விரிவான கலந்துரையாடலை, ஊடகவியலாளர்களின் பரந்தளவிலான பிரதிநிதித்துவத்துடன் எதிர்வரும் டிசம்பர் 13ஆம் திகதி நடத்துவதற்கும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இதன்போது உறுதியளித்தார்.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.