இலங்கை ஊடகத்துறையின் தொழில்முறை நிபுணத்துவத்தை மேம்படுத்த, இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களின் தொழில்சார் உரிமைகள் மீது கவனம் செலுத்துவது தொடர்பான பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் அண்மையில் வெற்றிகரமாக இடம்பெற்றன. 2022 ஆம் ஆண்டுக்கான இந்த தொடர் நிகழ்ச்சித்திட்டமானது சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் வழிகாட்டுதலினுடாக ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் இளம் ஊடகவியலாளர்கள் தங்களின் தொழில்சார் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை புரிந்துகொண்டு டிஜிட்டல் யுகத்தில் திறம்பட செயல்பட அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதாகும். ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள இளம் ஊடகவியலாளர்கள்; தொழில் ரீதியில்; அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காண ஆதரவளித்ததுடன், தொழிற்சங்கத்தின் மூலம் தங்களை ஒரு கூட்டமைப்பாக  இருந்து  இந்தச் சவால்களைச் சமாளிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் ஆக்கபூர்வமான வழிகளை கடைப்பிடிப்பதற்கு ஊடகவியலாளர்கள் வழிகாட்டப்பட்டனர்.

டிஜிட்டல் சகாப்தத்தின் பின்னணியில், ஊடகத்துறையில் நுழைவதற்கு நவீன திறன்களைக் கொண்ட இளம் ஊடகவியலாளர்களை உருவாக்குதுவதற்கு ஊடக நிறுவனங்கள் கடமைப்பட்டுள்ளன. இதற்கேற்றவாறு ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இளம் ஊடகவியலாளர்ள் இத்துறையில் தொடர்ந்தும் இருப்பதை உறுதி செய்வதற்காக பாடுபட்டு வருகிறது.

இந்த சூழலில், முதற்கட்டமாக ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நாடளாவிய ரீதியில் 200 ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டது. அவர்களின் உரிமைகள் மற்றும் இதர பிரச்சினைகள் மற்றும் ஊடக தொழிற்சங்கங்களின் கூட்டு முயற்சியின் மூலம் அவர்கள் எவ்வாறு உரிமைகளைப் பெறுவது என்பது குறித்து இங்கு கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் இடம்பெற்றன. இந்த கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இடம்பெற்றன. சிங்கள மொழி மூலமான 140 ஊடகவியலாளர்களும், தமிழ் மொழி மூலமாக 60 பேரும் இதில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது கட்டத்தில் ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக உள்ள, அனைத்து மாகாணங்களைச் சேர்ந்த 340 ஊடகவியலாளர்களின் தொழில் நிலை குறித்த கணக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த கணக்கெடுப்பின் ஒரு தனித்துவமான அம்சமாக உறுப்பினர்கள் தற்போது கடமையாற்றும்  ஊடக நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள தொழில்முறைசார் உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. ஊடகத்துறையின் முதுகெலும்பாக விளங்கும் பிரதேசவாரியான நிருபர்களுக்கு  பல்வேறு பிரச்சினைகளும் சவால்களும் அடையாளம் காணப்பட்டன. செய்திகளை அனுப்பும் ஊடகவியலாளர்கள் பலர், குறிப்பாக, அடிப்படை தொழிலாளர் உரிமைகளை அனுபவிப்பதில்லை என்பதும், அற்ப ஊதியம் மற்றும் மிகக் குறைந்த நிதியுதவியுடன் தங்கள் ஊடக கடமைகளை நிறைவேற்றுவதில் கடுமையான சிரமங்களுக்கு உள்ளாகி வருவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணையத்தளமான www.Fmetu.org யில் பதிவிடப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூன்றாம் கட்டமாக 20 இளம் ஊடகவியலாளர்களுக்கு கையடக்கதொலைபேசி ஊடகவியல் (Mobile Journalism) திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு 21 ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்த பயிற்சியில் 30% தமிழ்பேசும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டதோடு, 30% பெண் ஊடகவியலாளர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.  கொழும்பில் நடைபெற்ற இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை,  இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் டிஜிட்டல் ஊடக நிபுணரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சமீர திலக்கவர்தன மேற்கொண்டிருந்தார்.

பயிற்சியைத் தொடர்ந்து, இந்த ஊடகவியலாளர்கள். இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களின் தொழில்முறைசார் மற்றும் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி 17 வீடியோக்களை தயாரித்தனர். இந்த வீடியோக்கள் தற்போது ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளதோடு, YouTube தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் ஊடகவியலாளர்களின் தொழில்சார் நிலை மற்றும் உரிமைகள் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் விரிவான அறிக்கை ஒன்று தொகுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொழில் அமைச்சர் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் உள்ளிட்ட  சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் வெற்றிக்கும் விலைமதிப்பற்ற வழிகாட்டல் மற்றும் ஆதரவிற்காக   சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் பணிப்பாளர் திருமதி ஜேன் வொர்திங்டன் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் சகாக்களுக்கு, ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தனது நன்றியைத் தெரிவிக்கிறது.