இரத்மலானை அத்திடிய பிரதேசத்தில் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமரதுங்க படுகொலை செய்யப்பட்டு 13 வருடங்கள் இன்று ,2022 ஜனவரி 08 பூர்த்தியடைகின்றது.

லசந்த விக்ரமரதுங்க, கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயத்தில் பட்டப்பகலில் இனந்தெரியாத ஒரு கொலையாளியால் சுட்டுக் கொல்லப்பட்டு இராணுவச் சோதனைச் சாவடிகள் பலவற்றைக் கடந்து தப்பிச் சென்றமை யாவரும் அறிந்ததே. ஆனால் அந்த சோதனைச் சாவடிகளில் இருந்து யார் தப்பிக்க முடியும்? இது இன்று அனைவரும் அறிந்த இரகசியம். எனினும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த லசந்த விக்ரமரதுங்க உயிரிழந்துள்ளார். அது ஜனவரி 8, 2009 ஆம் திகயதியன்றாகும்.

அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் பட்டப்பகலில் இலங்கையின் பிரதான நாளிதழ் ஒன்றின் ஆசிரியரை கொலையாளிகள் கொன்றுவிட்டு இஷ்டத்துக்கு தப்பிச் சென்றிருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. படுகொலை செய்யப்பட்ட சிவராம், நிமலராஜன் போன்ற ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களான பிரகீத் போன்ற ஊடகவியலாளர்கள், பொத்தல, கீத் நொயார் போன்றவர்களை கடுமையான துன்புறுத்தலுக்குள்ளாக்கிய ஊடகவியலாளர்களுக்கு இந்நிலைமையை ஏற்படுத்திய, கொலையாளிகள், தாக்குதல்தாரிகள் மற்றும் அதற்கு உத்தரவிட்ட அடக்குமுறையாளர்களை உடனடியாக நாட்டுக்கு அம்பலப்படுத்த அதிகாரிகள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். அனைத்து குடிமக்களும் அதற்காக அணிவகுத்து நிற்கும் நேரத்தை பிற்போடுவதானது, குற்றத்தை செய்து தண்டனை பெறாமல் இருக்கும் வரலாற்று நடைமுறைக்கு மேலும் ஆதரவு வழங்குவது போன்றதாகும் என்பது எண்ணப்பாடாகும். ஆயினும் அதன மீண்டும் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும் கவலையளிக்கிறது

10 வருடங்களாக தீர்க்கப்படாத லசந்த விக்ரமரதுங்கவின் படுகொலை

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி இரத்மலானை அத்திடிய பிரதேசத்தில் லசந்த படுகொலை செய்யப்பட்டார். 2010 பெப்ரவரி 26ஆம் திகதி, கொலை செய்ய வந்த குழுவினர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கையடக்கத் தொலைபேசி இலக்கம், நுவரெலியா பகுதியைச் சேர்ந்த பி. ஜேசுதாசனின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டில் ஜேசுதாசன் பொலிஸ் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். பி.ஜேசுதாசனுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில், அன்றைய தினமே இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கந்தேகெதர பியவன்ச என்பவர், பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

மார்ச் 2010 இல், இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 17 பேர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் தடுத்து வைக்கப்பட்டு, நீண்ட விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ஜேசுதாசன் 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி சிறையில் திடீரென மரணமடைந்தார். ஜேசுதாசனின் மரணம், இயற்கை மரணம் என தெரிவிக்கப்படும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கந்தேகெதர பியவன்ச சரியான சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார். கைது செய்யப்பட்டதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததையடுத்து, அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கந்தேகெதர பியவங்சவுக்கு ரூ. 100,000 இனை செலுத்துமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டது.

2014 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி லசந்த விக்ரமதுங்கவின் ஐந்தாவது நினைவேந்தலில் லசந்தவின் மூத்த சகோதரர் லால் விக்ரமதுங்க, “ஜெனரல் பொன்சேகா லசந்தவைக் கொன்றார்” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மூன்று முறை கூறினார். இந்தக் குற்றச்சாட்டை முன்னாள் இராணுவத் தளபதி மறுத்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் லசந்தவின் படுகொலை விசாரணையை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவில் இருந்து நீக்கி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்தது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட விதம் மற்றும் அதற்கு யார் உத்தரவிட்டார்கள் என்பது அனைத்தும் வெளியாகியுள்ளதாக அப்போதைய அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஆனால் விசாரணைகள் மிகவும் மெதுவாகவே நடந்தன. இவ்வாறான நிலையில். லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பான சந்தேகநபர்கள் தற்போதைய அரசாங்கத்தில் இருப்பதால் தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை நடத்தாமல் உள்ளதா, என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2015 ஓகஸ்ட் 06ஆம் திகதி கேள்வி எழுப்பினார்.

2016 பெப்ரவரி 17ஆம் திகதி அன்று, லசந்த விக்ரமரதுங்கவின் கொலை தொடர்பான இரண்டு சந்தேக நபர்களின் தோற்றத்தை சித்தரிக்கும் இரண்டு உருவங்களை இலங்கை பொலிஸார் வெளியிட்டதோடு, அவர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியும் கோரப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி லசந்த விக்ரமரதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இராணுவ புலனாய்வு சார்ஜென்ட் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி, லசந்த கொலை செய்யப்பட்ட பின்னரான ஒரு நாளில் தமக்கு அச்சுறுத்தல் விடுத்த நபரென, கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சார்ஜென்டை, லசந்த விக்ரமரதுங்கவின் சாரதி நீதிமன்றில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் வைத்து அடையாளம் காண்பித்தார். முன்னாள் பத்திரிகை ஆசிரியர் உபாலி தென்னகோனை தாக்கிய குற்றச்சாட்டிலும் குறித்த இராணுவ வீரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். லசந்தவின் சடலம் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி மீண்டும் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது. ஆனால் அது தொடர்பான விசாரணைகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் முடங்கின.

2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் கவிழ்ந்ததையடுத்து, ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர். லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் வினவிய போது, ​​”யார் அந்த லசந்த ?” என கேட்ட அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கோட்டாபய ராஜபக்ச தற்போது இந்நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளார். அவ்வாறே, லசந்த உட்பட படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்கப்பட்ட எந்த ஊடக நிறுவனம் தொடர்பிலும் அன்றைய ராஜபக்ச ஆட்சி ஏற்றுக் கொள்ளக்கூடிய, வெளிப்படையான எந்தவொரு விசாரணைகளையும் நடாத்தவில்லை என்பதுடன், மக்களுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்து அதிகாரத்திற்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தினாலும் எந்தவொரு நியாயமும் நிலைநாட்டப்படவில்லை. எனவே, லசந்த படுகொலை செய்யப்பட்டு 13 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், அந்த நீதிக்காக எந்த முயற்சியும் எடுக்காத கடந்த காலத்தின் கொடூரமான நினைவுகளை முன்னிறுத்தியவாறு, எமக்கு வேண்டியது நீதியே என்று மீண்டும் எழுத வேண்டியுள்ள நிலையே காணப்படுகின்றது.

லசந்த விக்ரமரதுங்க படுகொலை தொடர்பான நீதியை கோரி, அக்கொலையின் 13 வருடங்கள் பூர்த்தியான ஜனவரி 08 ஆம் திகதி நாட்டின் பல பாகங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், அதில் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கமும் மட்டு ஊடக மையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் வி. கிருஷ்ணகுமார் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனையடுத்து சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமரதுங்கவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நினைவுத்தூபி நிர்மாணிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

ஆக்கம்
சம்பத் ஜயலால் (077 3711919)
செயற்குழு உறுப்பினர்
ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம்
(தமிழில்: RSM)