ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் தனது ஊடக அறிக்கைக்கான செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கொடூரமான தாக்குதலுக்குட்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் திகதி காலை முல்லைத்தீவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

‘முள்ளிவாய்க்கால்’ பெயர்ப் பலகையினை புகைப்படம் எடுத்தபோது அவரை முள்ளுக்கம்பியில் சுற்றிய பனைமரத் தடியினால் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் நின்றிருந்த இராணுவ வீரர்களினால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்னர்.

முல்லைத்தீவு ஊடகக் கழகத்தின் பொருளாளரும் ஊடகவியலாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பிலான புகைப்பட ஆதாரங்களுடன் இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகரிடம் வினவிய போது, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் தொடர்பான விபரங்களை பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலதிக விபரங்களை பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றதுடன், அவ்வப்போது பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றபோதிலும், அது தொடர்பில் அவர்கள் உரிய கவனம் எடுக்காமலிருப்பது வருத்தமளிக்கிறது.

ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீதான மிலேச்சத் தாக்குதல் தொடர்பில், உலகிலுள்ள 160 நாடுகளைச் சேர்ந்த 170 ஊடக சங்கங்கள் அங்கம் வகிக்கும் சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ((International Federation of Journalists-IFJ) அங்கத்துவ அமைப்பான ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது.

இத்தாக்குலானது அனைத்து ஊடகவியலாளர்களும் சுதந்திரமாக செய்தி வெளியிடும் உரிமை மீதான அச்சுறுத்தலாக எமது சம்மேளனம், இத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபர் உட்பட அரசின் அனைத்து அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.